பின்நவீன முற்போக்கு இலக்கியவாதி..?தினமும் காலை, மாலை மிதிவண்டியில் எனது கடைக்கு சுக்கு டீ கொண்டுவரும் சுப்பிரமணி வரைக்கும் நந்தலாலா படத்தை விமர்சித்து முடித்த நேரத்தில் எனது கருத்தை நானும் தெரிவிக்காவிடில் "தமிழ் இலக்கிய சமூக திரைப்பட வரலாற்று குழு"-வில் எனக்கு இடம் இல்லாமல் போய்விடும் என்ற பயத்திலும், திரைப்படம் வெளியான அன்றே இதுபோன்ற படங்களை பார்க்காவிட்டால் நானெல்லாம் என்ன பின்நவீன முற்போக்கு இலக்கியவாதி..(?). என்ற எண்ணத்தினாலும் அன்றைய தினம் சீக்கிரமே கல்லா கட்டிவிட்டு நண்பன் ஒருவனுடன் இருபது கிலோமீட்டர் பயணம் செய்து நாகப்பட்டினம் சென்று படம் பார்க்க கிளம்பினேன் கொட்டும் மழையில்.....

வாஞ்சூர் பார்டர் அருகே மகிழ்வுந்தை ஓரம் கட்டிவிட்டு சிறிது களிநீர் அருந்தியபடி அந்நேரத்து உற்சாக நண்பர்கள் சிலரிடம் எந்த திரையரங்கில்
நந்தலாலா திரைப்படம் வெளியாகியுள்ளது என்றேன்..? ஒருவருக்கும் தெரியவில்லை. மன்னிக்கவும். ஒருவருக்கும் புரியவில்லை. சாக்கடையில் போய் சந்தனம் தேடுவதை தாமதமாக உணர்ந்து, போஸ்டர் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இல்லையெனில் இருக்கும் மூன்று தியேட்டரில் ஏதேனும் ஒன்று என்ற எண்ணத்தை தொட்டு நாவில் நக்கிக்கொண்டு இருந்ததை வேகமாக முடித்து கிளம்பினேன்.

தண்ணீர் தேங்கிய பல சாலைகளில் தேடித் திரிந்து திரையரங்கை கண்டு டிக்கெட் கிடைக்குமா.. என்ற சந்தேகத்தோடு டிக்கெட் வாங்கி அரங்கினுள் நுழையும் போது மணி பத்து. உள்ளேயிருந்த நபர்களோ எட்டு. நாகப்பட்டினம் இலக்கிய வாசகர்கள், ரசிகர்கள்,ஆர்வலர்கள் நிரம்பிய ஊர். திரையரங்கின் கூட்டம் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. சிறிதுநேரத்தில் நந்தலாலா வுடனான எனது பயணம் துவங்கியது.

தெளிந்த நீரின் ஊடே சலசலத்து ஓடும் புற்களின் நடுவில் சம்மணமிட்டு அமர்ந்து ரசிக்கத் துவங்கினேன். நீண்ட புரிதலுக்கான ஆழ்ந்த அமைதியை அறிமுகக் கொடுத்திருந்தார் மிஷ்கின்.ஒரு சிறந்த திரைக்கதையை பார்க்கப்போகும் உணர்வை சிறுவனின் ஆரம்பக்காட்சிகளும், இளையராஜாவும், மகேஷ் முத்துசாமியும் ஏற்படுத்தியிருந்தார்கள். திகு திகுவென கிளம்பும் பாஸ்கர் மணியின் பாத்திர அமைப்பு திரைக்கதை முழுதும் வியாபித்திருந்தது.

கூழாங்கல் தோழி மயிலிறகின் வருடல். இருவரி கவிதை.

ஊனமுற்ற வழிகாட்டி, அம்மணக் குழந்தை, வக்கிரமான சாதி சண்டை தொடர்ந்த காட்சிகளை தூரத்து காட்சிகளாக காட்டினாலும் இதயத்தின் அருகே
அமர்கிறார் மிஷ்கின்.

" நீங்க என்ன சாதி...? , "ம்ம்ம் மெண்டல்" , " அது என்ன சாதி...?" - படிப்பறிவில்லாத, பகுத்தறிவில்லாத ஒரு குக்கிராமத்திலிருந்து பெரியா()ரின் குரல்...!!?

அடர் சிவப்பு ஆட்டோ, நீல நாயகி, மஞ்சள் நிற கார் - எண்ணங்களுக்கேற்ப வண்ணங்களை அள்ளி தெளித்திருக்கும் உணர்வு.

ஒவ்வொரு அழுத்தமான காட்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் பாஸ்கர் மணியின் பொருத்தமில்லாத ஷு வை இறுகப் பற்றியபடியுள்ள கேமெராவும்,
இரு கைகளும் சொல்லும் கதைகள் ஏராளம்.

திரைக்கதை முழுவதும் இறைந்திருக்கும் பசுமை, தாய்வாசல், அன்னைவயல் ஊருக்குள்ளே காணாமல் போய்விடுகிறது. உணர்வு முழுவதும் சோகம்
இழைந்தோட வெறுமை இதயத்தை குத்தி கிழிக்கிறது.

ஆளரவமற்ற சாலையில், தன் தாயை தேடித் திரியும் சிறுவன்.

திரைக்கதையின் முக்கிய பகுதியை இசையாலும், உடல் மொழியாலும் காட்டியிருக்கும் நேர்த்தி.

உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிடும் திரைக்கதையின் வசனங்களுடன் உலகத்தரம் சேர்க்கும் ராஜாவின் பின்னணி இசை.

சன் டிவி பாணியில் சொல்வதானால் மொத்தத்தில் - அவ்வப்போது கண்ணோரங்களில் சேரும் கண்ணீர் துளி - நந்தலாலா மாயம்.

சரி. விசயத்துக்கு வருவோம்.
அழகான, சந்தோசம் தரக்கூடிய எந்த ஒரு உணர்வும் நமக்கு ஏற்படுமாயின் அதை நம்மை சுற்றியுள்ள பெரும்பான்மை நண்பர்களுக்கும், சக மனிதனுக்கும் கொண்டு சேர்ப்பது நம் கடமை. கலை, பத்திரிகை, இணைய தொடர்பற்றவர்களுக்கு நந்தலாலா போய் சேர்ந்த வீதம் பூஜ்யத்திற்கும் கீழ். பாவம் ங்க என்னோடு படம் பார்க்க வந்த நண்பன். என்னையெல்லாம் ஒரு வினோத ஜந்து லிஸ்ட் லதான் வைச்சிருக்கான். நான் யாருடைய ரசனைகளையும் குறைத்து, கூட்டி மதிப்பிடவில்லை. தமிழ் நாட்டை பொருத்தவரையிலும் 80 சதவீத மக்களுக்கு இப்படம் போய் சேர்வது மிகக் கடினம். ஒரு நல்ல படத்திற்கான வியாபார உத்தி ரோபாட்டிக் அளவிற்கு தேவை இல்லாவிட்டாலும், இதுபோன்ற படங்களை சாதாரண மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தனி வியாபார உத்தியை பயன்படுத்தியிருக்க வேண்டும். மனுஷ்ய புத்திரனும், "நல்வார்த்தை வேந்தர்" சாரு நிவேதிதா வும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து எத்தனை பேர் ஸ்டே ட்யுனில் இருப்பான்..?

நான்கு கோடிகளுக்குள் எடுத்து முடிக்கப் பட்ட இப்படம் ஆடியோ உரிமை, தொலைகாட்சி உரிமை, இன்னபிற ரைட்ஸ் தவிர இரண்டு மூன்று வாரங்கள் ஓடினாலும் தயாரிப்பு செலவுக்கு பாதிப்பு வராதவகையில் வசூலித்துவிடும் என்றே தோன்றுகிறது. வெகுஜன மக்களை போய் சேராத ஒரு நேர்த்தியான படைப்பின் நோக்கம் என்ன..? என்னால் இப்படி எடுக்கமுடியும் என்ற ஒருவருக்கும், என்னால் இதை ரசிக்க முடியும் என்ற சிலருக்குமான படமாக இருக்கலாம் நந்தலாலா. நந்தலாலா - இயக்குனருடைய அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பு பலபேரிடம் இருந்தாலும் அஞ்சாதே படம் எடுத்தவருடைய அடுத்த படமா...? என்று கேட்க மிக அதிகம் பேர் உள்ளனர் என்பதே உண்மை. கீழே இறங்கி வாருங்கள் என்பதல்ல என் எண்ணம். பெரும்பான்மையினரை படிப்படியாக மேலே அழைத்து செல்லுங்கள் என்பதே விருப்பம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

உங்கள் நண்பர்களை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன் என்றார் ஒரு பேரறிஞர்.
நான் சொன்னேன் நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்.
முழித்த முழி முழியையே முழுங்கும் போல...
நீங்கள் யாரானால் என்ன..?
நான் யாரானால் என்ன..?
அனாவசியக் கேள்விகள்
அனாவசியப் பதில்கள்
எதையும் நிருபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்.

- ஆத்மாநாம்.


Links to this post

Read Users' Comments ( 0 )