உறுபசி.
எஸ். ராமகிருஷ்ணனின் இலக்கிய ஆளுமை அறிமுகப்படுத்த தேவையில்லாத ஒன்று. இவரின் கதைக்கான களமும், கதைமாந்தர் தம் இயல்பும் நம்மை பிறிதோர் இடத்திற்கு அழைத்து செல்பவை. சில நேரங்களில் அவை வாழ்வின் விளிம்பு நிலையாக கூட இருக்கலாம். பெரும்பாலும் எஸ்ரா வின் விரல் வழியே நான் கண்டவை எனக்கு அச்சம் கலந்த ஆச்சர்யங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. அந்த பயத்தை நான் ரசித்து கொண்டிருக்கிறேன் என்பது வேறு விஷயம்.


பசி, பயம், வலி, தனிமை, கழிவிரக்கம், துரோகம், தவிப்பு, சஞ்சலம் என நமக்கு நெருக்கமான பல உணர்வுகளின் மாயபிம்பத்தை உடைத்து வார்த்தைகளின் வழியே அந்த உணர்வுகளை நமக்கு உணர்த்துவதில் தேர்ந்தவர் எஸ்ரா. உடல்நிலை சரியில்லாத ஒரு தனிமைப் பொழுதில் படிக்க கிடைத்த அனுபவம் உறுபசி.


உறுபசியின் நாயகனை நாம் தேடி எங்கும் செல்ல வேண்டாம். நமக்குள்ளோ அல்லது நம்மை சுற்றியுள்ள ஒருவனாகவோ அவன் இருக்கக்கூடும். பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம் என்று காலங்காலமாக கூறிக்கொண்டும், கதைத்துக்கொண்டிருக்கும் ஒரு பொதுவான வேளையிலே ஒரு ஆண் மகனின் உணர்வுகளை, வாழ்வில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, அவமானங்களை, வலிகளை வாழ்க்கையில் நிலைக்க அவன் போராடும் போராட்டங்களை, அவனுக்கென்ற நட்பை, வேறுபடும் மனநிலையை சம்பத் வாயிலாக விவரித்து செல்கிறார்.


நாம் ஒவ்வொருவரும் நமது மத்திம வயதில் வாழ்வின் போராட்டத்தில் நமக்கு நெருக்கமான சில நண்பர்களை இழந்து வருகிறோம் என்பது நிதர்சனமான உண்மை. மிகவும் நெருங்கிப் பழகிய பல நண்பர்கள் இன்று எங்கிருக்கிறார்கள்? என்ன செய்து வருகிறார்கள் என்றே தெரிவதில்லை. தற்செயலாக சந்திக்க நேரிடும் சில அபூர்வ தருணங்களிலும் விலகிச் செல்வதாகவே அமைந்துவிடுகிறது பேச்சு.


தனி மனித ஏற்ற தாழ்வுகள், குடும்பச் சூழல், பணிச்சுமை என பல்வேறு நிர்பந்தங்களுக்கிடையில் நட்பும், நண்பனும் ஒதுக்கப்பட்டுவிடுகின்றன. இந்தகாலகட்டத்தில் ஒரு ஆண்மகனுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் வாழ்வை கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக வாழ்வை கசக்க செய்துவிடுகின்றன என்பதே நிஜம்.


தனக்கான வாழ்க்கையை, வாழ்வின் அடையாளங்களை தொலைத்துவிட்டு அவமானங்களையும் அலட்சியங்களையும் உதாசீனப்படுத்தி கிடைத்த வாழ்க்கையை தான் நினைத்தபடி ரசித்து நாற்பது வயதிலேயே மரித்து போன சம்பத்தின் மரணத்தில் துவங்கும் மூன்று நண்பர்களின் பயணம், சம்பத்தின் கடந்த கால வாழ்வின் ஊடே பயணித்து வாழ்வின் கசப்பையும் அதை ரசித்து வாழ்ந்த சம்பத்தின் வாழ்வையும், வாழ்வை காப்பாற்ற மனிதர்கள் ஆடும் கபட நாடகங்களையும் வெளிப்படையாக பேசிச்செல்கிறது உறுபசி.

சம்பத்தின் கல்லூரிக் கால பகுதிகள் அழகியலோடு புனையப்பட்டிருக்கின்றன. பெருவேட்கை கொண்ட லட்சிய மாணவனாகவும், திராவிட இயக்க பேச்சாளனாகவும், நாத்திகவாதியாகவும் பன் முகங்கள் கொண்ட சம்பத், யாழினி என்ற சிநேகிதியின் நட்பை வளர்ப்பதும் ஒரு நீரோட்டம் போல் சொல்லப்பட்டிருந்தாலும், பிற்பகுதியில் சம்பத்தின் மன இயல்பை காமமே ஆக்ரமித்துகொள்கிறது. பிற்பாதியில் குடிகாரனாக, சூதாடியாக, சிறுவியாபாரியாக என பல ஒவ்வொரு தருணத்திலும் காமத்தை பின்புலமாக கொண்டே இயங்க ஆரம்பிக்கிறான்.


வாழ்வின் கசப்பை இந்நூல் முழுவதும் இறைத்து செல்லும் வேளையிலும் சம்பத் உடனான கல்லூரி நண்பர்கள் மாரியப்பன், அழகர், ராமதுரை இவர்களின் தனிப்பட்ட நட்பும் இழை போல் படர்ந்தபடிவருகிறது. சம்பத்தின் மரணத்தையொட்டி நண்பர்கள் மூவரும் தனிமையை தேடிச் சென்ற ஒரு மலைபிரதேசத்தில் ஒவ்வொருவரின் உணர்வும் அதை வெளிப்படுத்தும் இடங்களும் இயல்பு. நண்பர்களுக்கிடையேயான ஒரு வாக்குவாதத்தில் ராமதுரை தன ஆத்திரம் தணியாமல் கூறுகிறான்.., " நாம சம்பத்தை பார்த்து நாமும் அது போல ஆகிவிடக் கூடாதுன்னு பயந்துகிட்டு இருந்தோம். அதே நேரம் அவன் மேல நமக்கு பொறாமையும் இருந்துச்சி.அவன மாதிரி நினைச்சத செய்ய முடியலேன்னு அவனைப் பார்த்து ரகசியமா பொறாமைப்பட்டிருக்கோம் ; ஒருநாள், ரெண்டு நாள் அவனைக் கூட வைச்சுகிட்டு அந்த ஆசைகளை நாம நிறைவேத்திக்கிட்டோம். நாமெல்லாம் ப்ராடுடா.... சம்பத் தான் நிஜமா வாழ்ந்தவன்..." என்கிறான்.


நிஜம் தான் என்பதுபோலிருந்தது.


வாழ்க்கை நமக்கு பல இடங்களில் பாடம் கற்று கொடுத்துவருகிறது. ஆனாலும் நமது நெருங்கிய நண்பர்கள் மூலமாகவும் அவர்களின் வாழ்வின் மூலமாகவும் கற்றுக்கொள்ளும் பாடம் தீர்க்கமுடியாத பெரும் துயரை நமக்கு தருவதாகவே இருக்கிறது.


இன்றளவில் தினமும் இணையத்தில் அமரும் ஒவ்வொரு பொழுதும் நம் மனதோடு ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிய நண்பன் ஒருவனின் பெயருக்கு முன்னால் ஒருபச்சை விளக்கு ஒளிர்ந்து எதிர்புறத்தில் அவனது இருப்பை உறுதி செய்து கொண்டுதானிருக்கிறது. என் தொடர்பிற்கான வழியை அவனுக்கு தெரியப்படுத்தி கொண்டிருக்கும் மற்றொரு பச்சை ஒளி என்பதும் சாசுவதம். வார்த்தைகளை மட்டும் தேடிக் கொண்டிருக்கிறோம் மூன்றரை ஆண்டுகளாய்...


இழப்பின் வலி சற்று கடினமானது தான்.


நன்றி : திரு.எஸ்ரா.
உயிர்மை பதிப்பகம்.


2 comments:

shanmuga raman said...

நாம் உண்மைகள் மேல் விழும் பொது தடயங்களை மறைக்க நினைக்றோம் தவிர காயங்களை கவனிபதில்லை .........

shanmuga raman said...

நாம் உண்மைகள் மேல் விழும் பொது தடயங்களை மறைக்க நினைக்றோம் தவிர காயங்களை கவனிபதில்லை ......... வலிகள் மறைத்து இதழ்களில் செயற்கையாய் மகிழ்ந்து பொழுதுகளை கழிக்கிறோம்.... உண்மையான நட்புகள் உடைந்த நிலையில் ..............