இரகசியங்களுக்கென்று ஒரு உலகம்.

பகிர்ந்துகொள்ளப்படாத உண்மைகள் பலவும் ஒன்று கூடி
ஒரு இரகசிய உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு
தன் இரகசியங்கள் உடைபட காத்திருக்கின்றன.
பல இரகசியங்கள் வலியுடனும்
மேலும் சில மிகுந்த வலியுடனும்
சில கொடூரமானதாகவும்
சில வக்கிரமானவைகளாகவும் இருக்கின்றன.
இரகசியங்கள் உடைந்து கரைந்துவிட தயாராகவே இருக்கின்றன
தனது பெயர் இரகசியங்கள் என இல்லாமலிருந்தால்.


Links to this post

Read Users' Comments ( 0 )

நிரம்பி வழியும் நினைவுகள்.

கோப்பை முழுவதும் நிரம்பி வழிகிறது
உன் நினைவுகளினால்....

கரும் புள்ளிகள் நிறைந்த கருநாகமொன்று
மெதுவாக ஊர்ந்து செல்கிறது

எதிரிலிருந்து என்னை முழுவதுமாய்
விழுங்கி கொண்டிருக்கிறது பொறித்த மீனின் கண்கள்

மழைக்கால பூச்சியை வெறித்தபடி
உறைந்திருக்கும் பல்லி

எங்கிருந்தோ பிய்த்து வந்த ஆட்டிறைச்சியை
நிதானமாக சுவைத்து கொண்டிருக்கிறதொரு பூனை
தன் பழுப்பு நிற கண்களை உருட்டியபடி

எறும்புகள் மொய்த்த என்னிரவு உணவில் கை வைக்கிறேன்

கோப்பை முழுவதும் நிரம்பி வழிகிறது உன் நினைவுகளினால்....


Links to this post

Read Users' Comments ( 0 )

தமிழக தேர்தல் - 2011


தமிழக தேர்தல் - 2011

சிறந்த கதாநாயகன் - தேர்தல் கமிஷன். [இப்போ வரைக்கும்....]

சிறந்த கதாநாயகி - திமுக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்.[அவ்ளோ கிளாமர்...]

சிறந்த கதாநாயகன் - சிறப்பு பரிசு - மு.கருணாநிதி.[இவரு நடிப்பை யாரும் மிஞ்ச முடியாது.]

சிறந்த கதாநாயகி - சிறப்பு பரிசு - கனிமொழி [ கூடிய சீக்கிரம் தேசியவிருது வாங்க போற தகுதி இருக்குறவங்க.]

சிறந்த குணசித்திர நடிகர் - வைகோ.[எப்போதும் இவரு அழுவாரு. இந்தவாட்டி இவருக்காக ஊரே அழுதது.]

சிறந்த வில்லன்கள் - ஆ.ராசா - ஆற்காடு.வீராசாமி. [இருட்டுலேயே பல வேலைகளை செய்ஞ்சவங்க.]

அரசியல்வாதிகளின் வில்லன் - அஸ்ரா கார்க் - சகாயம் - கண்ணப்பன் - இன்னபிற சில அதிகாரிகள்.[நோட் பண்ணு.. நோட் பண்ணு.. பெயரை நோட் பண்ணு..]

மக்களின் வில்லன் - தேர்தல் கமிஷன். [கொஞ்சமாச்சும் பணத்த கொடுக்க விடுங்க சாமிகளா...]

சிறந்த காமெடியன்கள் - கே.வி.தங்கபாலு -- வடிவேலு.[அவ்வ்வ்வ்...]

சிறந்த காமெடி - சிறப்பு பரிசு - கார்த்திக்.[சோலோ காமெடி கிங்.]

சிறந்த வசனகர்த்தா - வழக்கம் போல.. மு.கருணாநிதி. [எ.கா: தமிழகத்தை யார் ஆள்கிறார்கள் என்றே தெரியவில்லை...?]

சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - விஜயகாந்த்.

சிறந்த கிராபிக்ஸ் - சன்-கலைஞர் டிவி குழுமம்.

சிறந்த கோமாளி - ராமதாஸ் - திருமாவளன்.

சிறந்த கோமாளி - சிறப்பு பரிசு - கி.வீரமணி.

சிறந்த குடும்ப திரைப்படம் - ராமதாஸ் - குஷ்பூ -திருமா நடிப்பில் "கற்பின் பெருமை"

சிறந்த இளிச்சவாய பய பட்டம் - வேற யாரு, வழக்கம் போல இந்த கருமத்த எல்லாம் பாத்துட்டு பல்லு குடைஞ்சுகிட்டு இருக்கிற நாம தான்...!!!Links to this post

Read Users' Comments ( 2 )

மரணத்தின் வாசனை.

மலர்களின் வாசத்திலும்
நெஞ்சு கரிக்கும்.
நெளிந்து படரும் புகையில்
இடரும் பல ஞாபகங்கள்..!

எவருக்கோ காத்திருந்தபடி
நத்தையாய் நகரும் மணித்துளிகள்.
சின்ன சின்ன விசும்பல்கள்
பெருங்கூக்குரலிடும் அவ்வப்போது.

வெளிச்சத்தை வெறித்தபடி
உறைந்திருக்கும் பல்லி.
கனன்று கொண்டிருக்கும் நெருப்பு.
முடியவே முடியாதா..? என்றொரு பொழுது.

ஒவ்வொருவருக்குமிருக்கிறது.
மறக்கமுடியாததானவொரு
மயான இரவு.


Links to this post

Read Users' Comments ( 0 )

இரு படங்கள் - ஒரு பாடம்.

ஒரு திரைப்படம் தயாரிக்க துவங்கும் பொழுதே அதன் இயக்குனர், நாயகன் இவர்களைப் பொறுத்து அத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழத் துவங்குவது இயல்பு. நந்தலாலாவை பொறுத்தவரையில் மிஷ்கின் மீதான எதிர்பார்ப்பு ஓரளவிற்கு இருந்தாலும், முன்னரே வெளியான ராஜாவின் இசை அத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பை பெருமளவு உயர்த்த உதவியதை யாரும் மறுக்க முடியாது. இதுவரையிலும் நடந்தவை சரி.

படம் வெளிவருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பிலிருந்து அறிவுசார் "பதிவர் பட்டறை" களிலும், கலக (ஸாரி) உலக இலக்கியத்தை மோண்டு மோண்டு குடித்து தமிழ் மக்களிடையே வாராவாரமும், தினம் தினமும் அவற்றை அள்ளி தெளிக்கும் "நல்வார்த்தை வேந்தர்"களும், பிறர் மோண்டு குடித்த கலக (திரும்பவும் ஸாரி) உலக இலக்கியத்தை அள்ளி பருக காத்திருக்கும் கோடிக்கணக்கான தமிழ்க் குடிமக்களுக்கு மாதாமாதம் பத்து, இருபது புத்தகங்களாக வெளியிட்டு தமிழ் இலக்கிய கலகத்தை (ஸாரி எல்லாம் சொல்ல முடியாது) காப்பாற்றி வரும் இலக்கிய எழுத்தாள வியாபாரிகளும், கொடுத்த அலப்பறையில் என்னைப் போன்ற அல்வண்டு, சில்வண்டு விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லோரும் "கிக்கிஜூரோ ஹத்தி தோஷம் " பிடித்து கொள்ளும் என்ற பயத்தில் அலறி அடித்து படத்தை பார்த்து உருக ஆரம்பித்திருந்தோம்.
போதாக்குறைக்கு முகநூல், கீச்சு, பத்திரிகை, இலக்கிய கூட்டங்கள்..... அய்யயோவ் அப்பா....
பத்தே நாள்... இப்போ என்ன நடக்குதுன்னு யாருக்கும் யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 26 ம் தேதி படம் ரிலீஸ்.. 25 ம் தேதி நான் எழுதிய சின்ன
கீச்சு இது - http://twitter.com/kuttysuvaru/status/7821286537428992 .

அய்யா பெரிய மனுஷனுங்களா... உங்களைப் பார்த்து தான் நாங்க வளருறோம். வளரப் போறோம். ஓவர் ரியாக்ட் பண்ணி கூட்டத்தை கூட்டாதீங்க. கூட்டத்தை கலைக்காதீங்க.

அம்பேத்கார் - நிச்சயமாக வரலாற்று முக்கியத்துவம் உள்ள படம். இதே ஓவர் ரியாக்ட் இந்த படத்தையும் அட்டாக் செய்யும் பயம் அதிகமாகவே இருந்தது. நல்லவேளை அம்பேத்கார் கொஞ்சம் தப்பி பிழைத்ததற்கு நமது கலக இலக்கிய கூட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அதிகம் விமர்சிக்காமல் விட்டதற்காக... நன்றி.

விடாமல் பெய்த மழையில் பேப்பர் கப்பல் செய்து விட்டால் எல்லா அறைகளுக்கும் சென்று வரும் அளவிற்கு வீடு முழுவதும் தண்ணீர். ஒரு சிறிய மோட்டார் வைத்து இறைத்தபின்பே வீட்டில் சோறு போட்டார்கள். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு உதவும் என்பதால் மோட்டார் அமைப்பை வீட்டின் ஓரமாக அப்படியே வைத்திருக்கிறேன். அண்டை மாநிலத்தோடும், பக்கத்து வீட்டுக்காரனோடும் மற்ற காலங்களில் சண்டை வராமல் இருக்க இதுபோன்ற இயற்கை நிகழ்வுகள் பெரிதும் உதவிக்கொண்டிருப்பதால் சூடாக காபி குடித்துக் கொண்டு ஓவர் ரியாக்ட் செய்யாமல் மழையை ரசிக்க வேண்டியதுதான்.


Links to this post

Read Users' Comments ( 0 )

பின்நவீன முற்போக்கு இலக்கியவாதி..?தினமும் காலை, மாலை மிதிவண்டியில் எனது கடைக்கு சுக்கு டீ கொண்டுவரும் சுப்பிரமணி வரைக்கும் நந்தலாலா படத்தை விமர்சித்து முடித்த நேரத்தில் எனது கருத்தை நானும் தெரிவிக்காவிடில் "தமிழ் இலக்கிய சமூக திரைப்பட வரலாற்று குழு"-வில் எனக்கு இடம் இல்லாமல் போய்விடும் என்ற பயத்திலும், திரைப்படம் வெளியான அன்றே இதுபோன்ற படங்களை பார்க்காவிட்டால் நானெல்லாம் என்ன பின்நவீன முற்போக்கு இலக்கியவாதி..(?). என்ற எண்ணத்தினாலும் அன்றைய தினம் சீக்கிரமே கல்லா கட்டிவிட்டு நண்பன் ஒருவனுடன் இருபது கிலோமீட்டர் பயணம் செய்து நாகப்பட்டினம் சென்று படம் பார்க்க கிளம்பினேன் கொட்டும் மழையில்.....

வாஞ்சூர் பார்டர் அருகே மகிழ்வுந்தை ஓரம் கட்டிவிட்டு சிறிது களிநீர் அருந்தியபடி அந்நேரத்து உற்சாக நண்பர்கள் சிலரிடம் எந்த திரையரங்கில்
நந்தலாலா திரைப்படம் வெளியாகியுள்ளது என்றேன்..? ஒருவருக்கும் தெரியவில்லை. மன்னிக்கவும். ஒருவருக்கும் புரியவில்லை. சாக்கடையில் போய் சந்தனம் தேடுவதை தாமதமாக உணர்ந்து, போஸ்டர் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இல்லையெனில் இருக்கும் மூன்று தியேட்டரில் ஏதேனும் ஒன்று என்ற எண்ணத்தை தொட்டு நாவில் நக்கிக்கொண்டு இருந்ததை வேகமாக முடித்து கிளம்பினேன்.

தண்ணீர் தேங்கிய பல சாலைகளில் தேடித் திரிந்து திரையரங்கை கண்டு டிக்கெட் கிடைக்குமா.. என்ற சந்தேகத்தோடு டிக்கெட் வாங்கி அரங்கினுள் நுழையும் போது மணி பத்து. உள்ளேயிருந்த நபர்களோ எட்டு. நாகப்பட்டினம் இலக்கிய வாசகர்கள், ரசிகர்கள்,ஆர்வலர்கள் நிரம்பிய ஊர். திரையரங்கின் கூட்டம் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. சிறிதுநேரத்தில் நந்தலாலா வுடனான எனது பயணம் துவங்கியது.

தெளிந்த நீரின் ஊடே சலசலத்து ஓடும் புற்களின் நடுவில் சம்மணமிட்டு அமர்ந்து ரசிக்கத் துவங்கினேன். நீண்ட புரிதலுக்கான ஆழ்ந்த அமைதியை அறிமுகக் கொடுத்திருந்தார் மிஷ்கின்.ஒரு சிறந்த திரைக்கதையை பார்க்கப்போகும் உணர்வை சிறுவனின் ஆரம்பக்காட்சிகளும், இளையராஜாவும், மகேஷ் முத்துசாமியும் ஏற்படுத்தியிருந்தார்கள். திகு திகுவென கிளம்பும் பாஸ்கர் மணியின் பாத்திர அமைப்பு திரைக்கதை முழுதும் வியாபித்திருந்தது.

கூழாங்கல் தோழி மயிலிறகின் வருடல். இருவரி கவிதை.

ஊனமுற்ற வழிகாட்டி, அம்மணக் குழந்தை, வக்கிரமான சாதி சண்டை தொடர்ந்த காட்சிகளை தூரத்து காட்சிகளாக காட்டினாலும் இதயத்தின் அருகே
அமர்கிறார் மிஷ்கின்.

" நீங்க என்ன சாதி...? , "ம்ம்ம் மெண்டல்" , " அது என்ன சாதி...?" - படிப்பறிவில்லாத, பகுத்தறிவில்லாத ஒரு குக்கிராமத்திலிருந்து பெரியா()ரின் குரல்...!!?

அடர் சிவப்பு ஆட்டோ, நீல நாயகி, மஞ்சள் நிற கார் - எண்ணங்களுக்கேற்ப வண்ணங்களை அள்ளி தெளித்திருக்கும் உணர்வு.

ஒவ்வொரு அழுத்தமான காட்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் பாஸ்கர் மணியின் பொருத்தமில்லாத ஷு வை இறுகப் பற்றியபடியுள்ள கேமெராவும்,
இரு கைகளும் சொல்லும் கதைகள் ஏராளம்.

திரைக்கதை முழுவதும் இறைந்திருக்கும் பசுமை, தாய்வாசல், அன்னைவயல் ஊருக்குள்ளே காணாமல் போய்விடுகிறது. உணர்வு முழுவதும் சோகம்
இழைந்தோட வெறுமை இதயத்தை குத்தி கிழிக்கிறது.

ஆளரவமற்ற சாலையில், தன் தாயை தேடித் திரியும் சிறுவன்.

திரைக்கதையின் முக்கிய பகுதியை இசையாலும், உடல் மொழியாலும் காட்டியிருக்கும் நேர்த்தி.

உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிடும் திரைக்கதையின் வசனங்களுடன் உலகத்தரம் சேர்க்கும் ராஜாவின் பின்னணி இசை.

சன் டிவி பாணியில் சொல்வதானால் மொத்தத்தில் - அவ்வப்போது கண்ணோரங்களில் சேரும் கண்ணீர் துளி - நந்தலாலா மாயம்.

சரி. விசயத்துக்கு வருவோம்.
அழகான, சந்தோசம் தரக்கூடிய எந்த ஒரு உணர்வும் நமக்கு ஏற்படுமாயின் அதை நம்மை சுற்றியுள்ள பெரும்பான்மை நண்பர்களுக்கும், சக மனிதனுக்கும் கொண்டு சேர்ப்பது நம் கடமை. கலை, பத்திரிகை, இணைய தொடர்பற்றவர்களுக்கு நந்தலாலா போய் சேர்ந்த வீதம் பூஜ்யத்திற்கும் கீழ். பாவம் ங்க என்னோடு படம் பார்க்க வந்த நண்பன். என்னையெல்லாம் ஒரு வினோத ஜந்து லிஸ்ட் லதான் வைச்சிருக்கான். நான் யாருடைய ரசனைகளையும் குறைத்து, கூட்டி மதிப்பிடவில்லை. தமிழ் நாட்டை பொருத்தவரையிலும் 80 சதவீத மக்களுக்கு இப்படம் போய் சேர்வது மிகக் கடினம். ஒரு நல்ல படத்திற்கான வியாபார உத்தி ரோபாட்டிக் அளவிற்கு தேவை இல்லாவிட்டாலும், இதுபோன்ற படங்களை சாதாரண மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தனி வியாபார உத்தியை பயன்படுத்தியிருக்க வேண்டும். மனுஷ்ய புத்திரனும், "நல்வார்த்தை வேந்தர்" சாரு நிவேதிதா வும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து எத்தனை பேர் ஸ்டே ட்யுனில் இருப்பான்..?

நான்கு கோடிகளுக்குள் எடுத்து முடிக்கப் பட்ட இப்படம் ஆடியோ உரிமை, தொலைகாட்சி உரிமை, இன்னபிற ரைட்ஸ் தவிர இரண்டு மூன்று வாரங்கள் ஓடினாலும் தயாரிப்பு செலவுக்கு பாதிப்பு வராதவகையில் வசூலித்துவிடும் என்றே தோன்றுகிறது. வெகுஜன மக்களை போய் சேராத ஒரு நேர்த்தியான படைப்பின் நோக்கம் என்ன..? என்னால் இப்படி எடுக்கமுடியும் என்ற ஒருவருக்கும், என்னால் இதை ரசிக்க முடியும் என்ற சிலருக்குமான படமாக இருக்கலாம் நந்தலாலா. நந்தலாலா - இயக்குனருடைய அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பு பலபேரிடம் இருந்தாலும் அஞ்சாதே படம் எடுத்தவருடைய அடுத்த படமா...? என்று கேட்க மிக அதிகம் பேர் உள்ளனர் என்பதே உண்மை. கீழே இறங்கி வாருங்கள் என்பதல்ல என் எண்ணம். பெரும்பான்மையினரை படிப்படியாக மேலே அழைத்து செல்லுங்கள் என்பதே விருப்பம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

உங்கள் நண்பர்களை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன் என்றார் ஒரு பேரறிஞர்.
நான் சொன்னேன் நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்.
முழித்த முழி முழியையே முழுங்கும் போல...
நீங்கள் யாரானால் என்ன..?
நான் யாரானால் என்ன..?
அனாவசியக் கேள்விகள்
அனாவசியப் பதில்கள்
எதையும் நிருபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்.

- ஆத்மாநாம்.


Links to this post

Read Users' Comments ( 0 )