இரு படங்கள் - ஒரு பாடம்.

ஒரு திரைப்படம் தயாரிக்க துவங்கும் பொழுதே அதன் இயக்குனர், நாயகன் இவர்களைப் பொறுத்து அத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழத் துவங்குவது இயல்பு. நந்தலாலாவை பொறுத்தவரையில் மிஷ்கின் மீதான எதிர்பார்ப்பு ஓரளவிற்கு இருந்தாலும், முன்னரே வெளியான ராஜாவின் இசை அத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பை பெருமளவு உயர்த்த உதவியதை யாரும் மறுக்க முடியாது. இதுவரையிலும் நடந்தவை சரி.

படம் வெளிவருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பிலிருந்து அறிவுசார் "பதிவர் பட்டறை" களிலும், கலக (ஸாரி) உலக இலக்கியத்தை மோண்டு மோண்டு குடித்து தமிழ் மக்களிடையே வாராவாரமும், தினம் தினமும் அவற்றை அள்ளி தெளிக்கும் "நல்வார்த்தை வேந்தர்"களும், பிறர் மோண்டு குடித்த கலக (திரும்பவும் ஸாரி) உலக இலக்கியத்தை அள்ளி பருக காத்திருக்கும் கோடிக்கணக்கான தமிழ்க் குடிமக்களுக்கு மாதாமாதம் பத்து, இருபது புத்தகங்களாக வெளியிட்டு தமிழ் இலக்கிய கலகத்தை (ஸாரி எல்லாம் சொல்ல முடியாது) காப்பாற்றி வரும் இலக்கிய எழுத்தாள வியாபாரிகளும், கொடுத்த அலப்பறையில் என்னைப் போன்ற அல்வண்டு, சில்வண்டு விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லோரும் "கிக்கிஜூரோ ஹத்தி தோஷம் " பிடித்து கொள்ளும் என்ற பயத்தில் அலறி அடித்து படத்தை பார்த்து உருக ஆரம்பித்திருந்தோம்.
போதாக்குறைக்கு முகநூல், கீச்சு, பத்திரிகை, இலக்கிய கூட்டங்கள்..... அய்யயோவ் அப்பா....
பத்தே நாள்... இப்போ என்ன நடக்குதுன்னு யாருக்கும் யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 26 ம் தேதி படம் ரிலீஸ்.. 25 ம் தேதி நான் எழுதிய சின்ன
கீச்சு இது - http://twitter.com/kuttysuvaru/status/7821286537428992 .

அய்யா பெரிய மனுஷனுங்களா... உங்களைப் பார்த்து தான் நாங்க வளருறோம். வளரப் போறோம். ஓவர் ரியாக்ட் பண்ணி கூட்டத்தை கூட்டாதீங்க. கூட்டத்தை கலைக்காதீங்க.

அம்பேத்கார் - நிச்சயமாக வரலாற்று முக்கியத்துவம் உள்ள படம். இதே ஓவர் ரியாக்ட் இந்த படத்தையும் அட்டாக் செய்யும் பயம் அதிகமாகவே இருந்தது. நல்லவேளை அம்பேத்கார் கொஞ்சம் தப்பி பிழைத்ததற்கு நமது கலக இலக்கிய கூட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அதிகம் விமர்சிக்காமல் விட்டதற்காக... நன்றி.

விடாமல் பெய்த மழையில் பேப்பர் கப்பல் செய்து விட்டால் எல்லா அறைகளுக்கும் சென்று வரும் அளவிற்கு வீடு முழுவதும் தண்ணீர். ஒரு சிறிய மோட்டார் வைத்து இறைத்தபின்பே வீட்டில் சோறு போட்டார்கள். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு உதவும் என்பதால் மோட்டார் அமைப்பை வீட்டின் ஓரமாக அப்படியே வைத்திருக்கிறேன். அண்டை மாநிலத்தோடும், பக்கத்து வீட்டுக்காரனோடும் மற்ற காலங்களில் சண்டை வராமல் இருக்க இதுபோன்ற இயற்கை நிகழ்வுகள் பெரிதும் உதவிக்கொண்டிருப்பதால் சூடாக காபி குடித்துக் கொண்டு ஓவர் ரியாக்ட் செய்யாமல் மழையை ரசிக்க வேண்டியதுதான்.


0 comments: