மும்பை - சங்கமம்


சமீப காலமாய் மிக அதிக பரபரப்பிற்கு பெயர் போன நகரம் மும்பை. நண்பர்கள் சூழ அதை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியமே ... பின்னே என்னங்க சொல்லறது...? மும்பையின் ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு பாம் வெடிச்ச கதை இருக்கு. பெண்களின் உயர்வான நிலைகளையும், அதற்கு நேர் எதிரான பெண்களின் நிலையும் அதிக அளவில் வெளிப்படையாக பார்க்க முடிவது இங்கு மட்டுமே... மும்பையின் டிராபிக் உலகம் அறிஞ்ச விஷயம். இவ்ளோவையும் தாண்டி ரசிக்கிற விஷயம் நிறைய இருக்கு மும்பைல....

எத்தனை பெரிய தாக்குதல் நடந்தாலும் அடுத்த நாளே இயல்பு வாழ்க்கைக்கு திரும்புற மக்கள். தீவிரவாதி தாக்குதல், தாஜ் ஹோட்டல் இரண்டாவது நாள் பக்கத்து தெருவில் வழக்கம் போல டீ கடை ஓபன் பண்ணி வியாபாரம் பண்ற மக்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்த அவங்க அங்க, அவயங்கள் மட்டுந்தான் சொல்லணும்.

வழக்கம் போல பார்ட்டி, ரோமிங் மட்டுமில்லாம ஒரு சின்ன சுவாரஸ்யமான சம்பவம், நண்பர்களுக்கிடையே நடந்த ஒரு பந்தயம். ஜுஹு பீச் - மும்பை. நம்ம நண்பர்களோட மும்பையின் அழகை கொஞ்சமா அள்ளி பருகிட்டு, பீச்- இளைப்பாறிக் கொண்டிருக்கோம். தூரத்தில ஒரு வெளிநாட்டு பொண்ணு. வழக்கம் போல நம்ம ஆட்கள் நாலு பேர் சுத்தி நின்னு அது சிகரெட் குடிக்கிறதை வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காங்க. நம்ம நண்பர்கள் சவால் விட பேசியே தீர்வதுன்னு நானும் சக நண்பன் ஒருவனும் கிளம்ப, ஆரம்பமானது அமர்க்களம் . பெண்களோட பேசி அதிக பழக்கம் இல்லாத குரூப் நமளுது(நிஜமா நம்புங்க ....!) .


சரியாக பதினைந்து நிமிஷம் சக நண்பனுடன் சேர்ந்து எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் மொக்கை போட்டு கொஞ்ச நேரம் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்க முடியுமா .? என்று கேட்டதற்கு... பதில். வொய்நாட்..?
சரியா போச்சு.. நண்பர்கள் கிட்ட ஒரு படத்த ஓட்டிடலாம்னு பிளான் பண்ணி நண்பர்களை அறிமுகம் செய்தாச்சு. பெயர் இவான் ரித்லேர் ஊர் ஜெர்மன் அவ்ளோதாங்க அதுக்கு அப்புறம் எனக்கு எதுவுமே காதில விழல. ஏன்னா நம்ம காதில புகை தான் வருது. என்னை தவிர எல்லோரும் அவகிட்ட பேசிகிட்டு இருக்காங்க. சுமார் ரெண்டு மணிநேரம் அவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ மொக்கை போட்டாங்க. திரும்பவும் என் காதில புகை.


அவங்க பேசினதோட சாராம்சம் இதுதான்.. ஜெர்மன் பொண்ணு. சுமார் ஏழு மாசமா எட்டு நாடுகளை சுத்திட்டு முதல் தடவையா இந்தியா வந்திருக்கா தனியா..( நோட் பண்ணிக்கோ. ). நிஜம்மாவே ரொம்ப தைரியசாலியான பொண்ணு . (நாமெல்லாம் பக்கத்துல இருக்கிற மும்பை போறதுக்கே எட்டு வருஷமா பிளான் போடுற ஆட்கள் ) . ரொம்ப உஷார் . எது பேசணும்.. எது பேசக்கூடாது ன்னு நல்ல தெளிவு.

நல்லா போயிட்டு இருந்த அரட்டை கூடவே இருந்த நண்பன் ஒருத்தன் போட்டான் திடீர் பௌன்செர்.. ''கேன் யு ஜாயின் வித் அஸ டுமாரோ..? (அடப்பாவி..) நாளைக்கு நாங்க எல்லோரும் வாட்டர் தீம் பார்க் போறதா பிளான். உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா நீயும் வா.'' சிறிதே தயங்கின பெண்ணிடம், பயப்படாதே.. உன்னோட பாதுகாப்பிற்கு நாங்க உறுதின்னு இன்னொருவன் யார்க்கர் போட விக்கெட் காலி. ஓகே . போலாம் அவ சொல்ல.. (இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிட்டு இருக்கு..?) நாளைக்கு காலைல அவ தங்கிஇருக்கிற ஹோட்டல் பிக்அப் பண்றதா சொல்லி சபையை கலைத்தோம்.

அடுத்த நாள் அவளை கூப்பிட்டு போவதா வேண்டாமானு எங்களுக்கிடையே சின்ன சலசலப்பு. பெரும்பான்மையான மக்கள் ஜெர்மனுக்கே ஆதரவு அளிக்க ஒரு சில கட்டுப்பாடுகளோடு அவளை அழைத்து செல்ல முடிவெடுத்தோம். நாங்க மொத்தம் ஏழு பேர். அதில நாலு பேர் நைட் தூங்கவே இல்ல..(சத்தியமா நான் அதில இல்லைங்க..). அதிகாலைலேயே ரெண்டு பேர் கிளம்பி அவளை பிக்அப் பண்ண போயாச்சு.

இவான் ரித்லேர் - அன்று இரவு ஏழு மணிக்கு கோவா போவதற்கு டிக்கெட் போட்டுருக்கா. அதுக்குள்ளே திரும்பியாகணும். மும்பை-யிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வாட்டர் கிங்டம் தீம் பார்க். அவளுக்கான சின்ன காத்திருப்புக்கு அப்புறம் பலமுறை மன்னிப்பு கேட்டவாறு வந்துசேர்ந்தாள். எங்களிடமிருந்த சிறிய சான்ட்ரோ-வை தவிர்த்து அவளுக்காக குவாலிஸ் அமர்த்தி கிளம்பினோம். (பட்சி சிக்கிருச்சு டோய்...)

அவளுக்காகவும் அவளை பிக்கப் பண்ண போன நண்பர்களுக்காகவும் காத்திருந்ததில் ஏற்பட்ட சின்ன சலிப்பு மற்றும் வெறுப்பு அவள் வந்து சேர்ந்ததும் இயல்பான கோபத்துடன் '' அம் ஆங்ரி வித் ஹங்க்ரி பிகாஸ் அப் யு ..'' என்று நண்பன் ஒருவன் அரைகுறை ஆங்கிலத்தில் ஆரம்பிக்க கலகலப்பாக துவங்கியது பயணம்.

அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வரலாற்று சுவடுகள் (இதெல்லாம் கொஞ்சம் ஓவர்பா...) .

இவான் தண்ணீரை பார்த்ததில் இருந்து குழந்தையாகவே மாறி இருந்தாள். பொதுவாகவே அருவியும், ஆறும், பெருமளவு நீரும் தன்னுடன் இணையும் எவரையும் குழந்தையாகவே மாற்றிவிடும் தன்மையுடையது.

நாங்கள் அனைவருமே குழந்தை பருவத்திற்கு திரும்பியிருந்தோம். நிறம், மதம், மொழி, நாடு அனைத்தும் கரையில் கிடந்தது. சந்தோசம் மட்டுமே எங்களுடன் சேர்ந்து தண்ணீரில் கும்மாளமிட்டது.

ஒவ்வொரு விளையாட்டிலும் இவான் முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்திகொண்டிருந்தாள். அவளுடைய கலாச்சாரம், மனமுதிர்ச்சி, எண்ணங்கள் முற்றிலும் வேறுபட்டிருந்தது . இவற்றை நம்மவற்றுடன் ஒப்பிட இயலாது ஒப்பிடவும் முடியாது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. இவான்-யதார்த்ததிற்கு மிகவும் அருகில் இருந்தாள். இருபத்தி மூன்று வயதில் அவளுடைய மனப்பக்குவம் ஆச்சர்யமான ஒன்று. அவளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் நாம் யதார்த்ததிற்கு வெகு தொலைவில் உள்ளதாகவே தோன்றுகிறது.

ஒன்றாக உணவருந்தி, விளையாடி, நடனமாடி களைப்புடன் அமர்ந்தோம். அவர்களின் பழக்கவழக்கம், திருமணம், பெற்றோர், விருப்பம் பல விஷயங்களை நம்மவற்றுடன் பகிர்ந்து பேசி குறையாத மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நேரத்தில் அவளை கோவா-விற்கு வழி அனுப்பிவைத்து திரும்பினோம். என்னை பொறுத்தவரை இவான் ரித்லேர் ஒரு பறவை சுதந்திர பறவை. ஒரு பறவையின் பயணத்தை எவராலும் கணிக்க முடியாது. அதன் பயணத்திற்கு என்றும் முடிவும் இல்லை.


2 comments:

Guru said...

மேலை நாடுட்டு மக்கள் நடைமுறையும் எதார்த்தமுமாக வாழ்கிறார்கள். நாம் கட்டுப்பாடுகளையும், தயக்கங்களையும் களைந்தேறிய கற்றுக்கொள்ள வேண்டும்.

வசந்த் ஆதிமூலம் said...

வருகைக்கு நன்றி நண்பா. நீங்கள் கூறிய கருத்து முற்றிலும் உண்மை. யதார்த்தை விட்டு நாம் வெகு தொலைவிலேயே இருக்கிறோம்.