பசுவய்யா - கவிதைகள்


ஐம்பதுகளின் துவக்கத்தில் எழுதத்துவங்கிய சுந்தர ராமசாமி மொத்தமாக எழுதிய கவிதைகள் மிகக்குறைவு . (பசுவய்யா என்ற புனைப்பெயரில்)

1931 ல் நாகர்கோவிலில் பிறந்த சுந்தர ராமசாமி ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் மொழிகளையும் கற்று தேர்ந்தவர்.

மூன்று நாவல்கள், 150 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 65 சிறுகதைகள் எழுதியுள்ளார். தவிரவும் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் இருந்து பல நாவல்களையும், சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

சு.ரா.வின் படைப்புகள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவரின் புகழ்பெற்ற நாவலான ''ஒரு புளியமரத்தின் கதை" , ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மற்றும் ஹூப்ரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1988 ல் காலச்சுவடு இலக்கிய இதழை தொடங்கினார்.

சு.ரா. வின் கவிதைகள் தன்னை முன்னிறுத்தி வாழ்வின் ரகசியங்களை, ஏக்கங்களை, அறியாமைகளை, வெட்கங்களை, கனவுகளை, சோகங்களை வெளிப்படுத்துபவை.

மனித வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அறியத்துடிப்பவை.

ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி யில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் குறிப்பிடுகிறார் சு.ரா.

ஒருவித கிண்டலான தோனி இவரது கவிதைகளில் இருந்தாலும், ஆழ்ந்த தளத்தில் அனுபவப்பூர்வமாக சிந்தனையை தூண்டுபவை அவை.

தனது 74 வது வயதில் 2005 அக்டோபர் மாதம் 15 ம் தேதி சு.ரா காலமானார்.


********************


சவால்


நோவெடுத்து சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக்கட்ட
கயிருண்டு உன்கையில்


வாளுண்டு என்கையில்

வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலிமையுண்டு

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நடையேற்றும் காலங்கள்

எனது கோடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.


********************


கன்னியாகுமரியில்....


இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்

எங்கிருந்தோ வந்து

சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது

இந்த ஆட்டுக்குட்டி

அசடு
அபோதம்
தன்னிலை அறியாதது


இடம்பெயர்வதா நான்
அல்லது
நின்ற நிலையில் நிற்பதா?

மூளையின் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி

சூரியனைக் காணோம் .



********************


வாழ்க்கை


நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,

நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.


********************


கதவை சுண்டாதே


என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியை கட்ட கடைசி நாள் கேட்பாய்

பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
அவர் தொலைபேசி எண் ? என்பாய்

கையால் ஆகாதவன் என என்னைச் சொல்லாமல் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம் சரித்துவிட்டும் போவாய்

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை

அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால் என் கதவைச் சுண்டாதே

தயவு செய்து ...



********************


இந்த நிழல்


எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?


பூமியில் காலுன்றி நிற்கும் போது

நிழல்மேல்தான் நிற்கிறோமா?

காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்

அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும் போது

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்கு தெரியவேண்டும்.


********************


வருத்தம்


வேட்டையாடத்தான் வந்தேன்

வேட்டைகலையின் சாகச நுட்பங்களை

தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்

பின் வில்வித்தை

பின் வாள்வீச்சு

பின் குதிரை ஏற்றம்

பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்

திறந்து வைத்த கற்பூரம் போல்

ஆயுளின் கடைசித் தேடல் இப்போது

இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை

பின்னும் உயிர் வாழும் கானல்.



********************


தனது மரணத்தை பற்றி குறிப்பிடும் போது ''ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.'' என்கிறார் சு.ரா.


என் நினைவுச்சின்னம்


இரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே

நம் கலாச்சாரத் தூண்களின்

தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே
.
.

.
இருப்பினும்

நண்ப,

ஒன்று மட்டும் செய்.


என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
'கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான்' என்று மட்டும் சொல்.
உன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.


********************


2 comments:

shanmuga raman said...

வசந்த் உங்களுக்கு நன்றி

நல்ல கவிஞர்களை அறிமுகம் செய்வதன் முலம் எதோ ஒரு corner இல [Bangalore ] வாழும் எங்களுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதம்[!] [காசு மிச்சம் ]

நகுலன் , ராமசுவாமி .. இவர்களில் நான் எதிர்பார்பது திரு.சாவி பற்றிய
உங்கள் பதிவை.

வசந்த் ஆதிமூலம் said...

மக்கா இன்னும் என்ன வேணும் கேளு மக்கா. முடிஞ்சத கண்டிப்பா தருவோம். அப்புறம் நம்ம கடை பக்கம் வந்ததுக்கு ரொம்ப நன்றிப்பா.