ஆதலால் காதலுடன் . . .

உன் மீதான காதல்
நிரம்பிக்கொண்டேபோகிறது। - என்னுள்
நீ தான் எங்கிருக்கிறாய் என்றே தெரியவில்லை.....!!!


எப்பொழுதோ படித்த ஒரு வரி நினைவில் வருகிறது। " ஒரு பூ மலர்வது போல தான் இருந்தது உனக்கும் எனக்கும் இடையிலான நட்பு "। கவிதை போல் இல்லை வாழ்க்கை। ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம் அன்பு என்ற சொல்லை நான் உணர்ந்தது என் அன்னைக்கு பின் உன்னிடம் தான். குளிர் உறையும் பெட்டியில் இருந்து எடுத்து வெளியில் வைக்கப்பட்ட பனிக்கட்டி போல் உருகி வழிந்து கொண்டிருந்தது என் மனது - உன்னை பார்த்த நாள் முதல் .

அடர் பச்சை நிற சுடிதாரும் , வெள்ளை நிற துப்பட்டாவும் அணிந்து நேர்த்தியாக பின்னப்பட்ட தலைமுடியை ஒதுக்கியவாறு மிக சாதாரணமாக நீ நடந்து வந்துகொண்டிருந்தாய். தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த எனக்கு அன்று ஒரு பேருண்மை புரிந்தது. தேவதைகளும் பச்சை நிற சுடிதார் அணிந்து என்னை போன்ற எளியவனுக்கும் காட்சி தருவார்கள் என்று.

காதோரம் சுருண்ட
மெல்லிய கூந்தல்...
சின்னதாய் கன்னத்து குழி...
வரியோடிய சிவந்த இதழ்கள்।
இன்னும்... இன்னும்... .........
................. ........... ......... ..........
நிராயுதபாணியாக நான்....!

யாருமற்ற அதிகாலை நேரத்தில் சாலையோர பேருந்து நிறுத்தத்தின் ஒரு ஓரத்தில் பேருந்தை எதிர்பார்த்தபடி நீயும், மறு ஓரத்தில் உன்னையே பார்த்தபடி நானும் நின்று கொண்டிருப்போம். எனக்கான காலத்தின் அழகான காலைபொழுதுகளை அச்சமயம் இயற்கை எனக்கு அளித்திருந்தது. பேருந்து நிறுத்தம் முழுதும் இறங்கி நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது என் காதல். எங்கும் நிறைந்த காதல் அவளின் கால் விரல் நகங்களை கூட தொட முடியாமல் அவளின் அருகிலேயே ததும்பி கொண்டிருந்தது.

பெரிதாய் ஒன்றும்
வேண்டாம்.
நீ அவசரமாய்
குளித்து கிளம்புகையில்
உன் கால் புடவை மடிப்பின்
ஓரங்களை நீவி சரிசெய்யும்
வரம் மட்டும் தா... போதும்.!


அவள் மீதான காதல் எல்லையில்லாமல் விரிந்து கொண்டே சென்றது. விஸ்வரூபம் எடுத்துகொண்டிருந்தால் அவள் என்னுள்!. நாட்கள் வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக மாறிக்கொண்டிருந்தன. காதல் அப்படியே இருந்தது. பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள வயது முதிர்ந்த ஆலமரம், அமர்வதற்கென்று போடப்பட்ட கல் நாற்காலி, அப்புறம் நான், எப்போவாவது கிடைக்கும் அவளின் பார்வையின் முடிவில் மேற்சொன்ன மூன்றும் ஒன்றாக இருப்பதாகவே பட்டது எனக்கு. நிறைந்த காதல் நிறைந்ததாகவே இருந்தது.

உன்னை நான் நேசிக்கிறேன் என்பதை எப்படியாவது அவளுக்கு உணர்த்திவிட துடித்தேன் துளி அளவு கூட தைரியம் இல்லாமல். மனதின் கோட்டையில் அவளை அரசியாக்கி நான் அடிமையாகவே கிடந்தேன். அவளை பார்த்த சந்தோசத்தில் சில நாட்களும், பார்க்கமுடியாத ஏக்கத்தில் பல நாட்களுமாய் நான்கு வருடங்கள் கடந்து விட்டன.

சில மாதங்களிலேயே குடும்பம் , பணி என்ற சூழலில் சிக்கி அழுத்தியடிக்கப்பட்டு ஒரு பெருநகர வாழ்க்கைக்கு பழகிக்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் பின்னிரவில் அலைபேசியில் அழைத்தான் நண்பன். "மாப்ளே.. உன் ஆளுக்கு கல்யாணம் டா. பெங்களூர் ல கல்யாணம். அங்கேயே செட்டில் ஆயிடுறாங்க..."
அலைபேசியை அணைத்தேன். வாழ்க்கை உணர்த்திய அனுபவம் மென்சிரிப்பாக வெளிவந்தது. தைரியமில்லாத இளம் பருவ காதலை எண்ணி சிரிப்பும், அவளின் கல்யாண செய்தி கேட்டு மிதமான சந்தோசமும், காரணம் தெரியாத காரணங்களினால் ஒரு பெரிய மன அழுத்தம் என விடியலே இல்லாமல் நர்கந்து கொண்டிருந்தது அந்த இரவு.

அடுத்த சில வருடங்களுக்கு பின் பண்டிகைகால விடுப்பில் ஊருக்கு சென்ற ஒரு நாளில் அந்தி சாயும் ஒரு பொழுதில் அதே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருக்கிறேன். சற்று தொலைவில் பெருத்த உடம்புடன், இடுப்பில் கைக்குழந்தையுடன் ஒரு பெண். இதயம் ஒரு நொடி நின்று அதிர்ந்தது. தேவதை. அடர் பச்சை நிற சேலையில். தொலைவிலேயே நின்ற என் கால்கள் கற்களும், முட்களும் நிறைந்த சாலையோர மண்சரிவில் இறங்கி வேகமாக நடக்க தொடங்கியது.

உன்னை விடவும்
உனது பிரிவு
எனக்கு பிடித்தமானதாயிருக்கிறது .
உன்னை நினைத்து கொண்டேயிருக்க....

கண்களில் நீருடன் காதல் நிறைந்தே இருந்தது.




2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

தத்துபித்து said...

// தைரியமில்லாத இளம் பருவ காதலை எண்ணி சிரிப்பும், அவளின் கல்யாண செய்தி கேட்டு மிதமான சந்தோசமும், காரணம் தெரியாத காரணங்களினால் ஒரு பெரிய மன அழுத்தம் என விடியலே இல்லாமல் நர்கந்து கொண்டிருந்தது அந்த இரவு.///

இது தான் உண்மை. பெரும்பாலும் எல்லோரையும் இப்படி ஒரு இரவு கடந்து போய் இருக்கும் நான் உள்பட.