தொடரும் அபத்தங்கள்

எங்கு துவங்கினோம் என்றும் நினைவில் இல்லை. எப்படி தொடர்ந்தோம் என்பதும் தெரியவில்லை.
தொடர்ச்சி மட்டுமே வாழ்க்கை என்று மட்டும் புரிகிறது. சிறிய கால இடைவெளிக்கு நண்பர்கள் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு....


குளிர்ந்த காற்று, மிதமான மழை ஒரு உன்னதமான அதிகாலைப்பொழுதில் சென்னையை வந்தடைகிறேன் பல மாதங்களுக்குப் பின் இரு நாள் பயணமாக மட்டும். மனிதர்களைப் போலவே நகரத்து கட்டிடங்களும், சாலைகளும் உருமாறிக்கொண்டுதான் இருக்கின்றன போலும் நாள்தோறும். சென்னையின் மாற்றம் அபிரிமிதமானது. வந்த வேலை தவிர காலதேவன் அனுமதித்தால் ஏதாவது ஒரு படம் சத்யம் தியேட்டரிலும், ஒரு பொழுது முருகன் இட்லி கடையிலும், அழுக்கடைந்த சென்னையின் அனைத்து டாஸ்மாக்கினுள் ஏதாவது ஒன்றில் நண்பனுடன் ஒரு மாலைப்பொழுதையும் கழிக்க விருப்பம்.


முரண்பட்ட இருவேறு களங்களாக இருந்தாலும் ஜெஸ்ஸியும், கனியும் இன்னமும் கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வசந்த பாலனுக்கு ஒரு ராயல் சல்யூட். பிழைக்க வழியின்றி கரையோரமாய் ஒதுங்கி கிடக்கும் சுறா-வைப் பற்றிய செய்திகளால் உள்ளூர மகிழ்ச்சி, அடுத்த படமாவது ஒரு நல்ல படம் கொடுப்பார் இளைய தளபதி என்ற வழக்கமான அற்ப ஆசையோடு.., அண்ணா நகர் சிக்னலில் திரும்பினால் பி வி ஆர் தியேட்டர்ஸ் புதிதாக சென்னையில். பாக்கெட்டில் இருக்கும் கொஞ்ச பைசாவையும் உள்ளே இழுத்து புடுங்கிக்கொண்டுதான் விடுவார்கள் போல் தோன்றியதால் ஓடியே வந்துவிட்டேன்.


இணையத்தில் அமர்வதே சற்று கடினமான எனது சூழலில் சிறிது தாமதமாக தெரிந்துகொண்ட வலைப்பதிவர்கள் குழுமம் பற்றிய செய்திகள் மகிழ்ச்சியை தந்தது. சிலவாரங்கள் தவற விட்ட நண்பர்களின் பதிவுகளை புரட்டுகையில், உண்மையிலேயே அங்காடி தெரு திரைப்படத்தின் சில காட்சிகள் சற்றே மிகையானதாக இருந்தாலும், வழக்கமான தங்களின் தெனாவெட்டு தொனியை மிகவும் அதிகமாக விமர்சனங்களில் வெளிப்படுத்தியிருக்கும் ரசனைமிகு நண்பர் அதிஷா வும் , தோழர் லக்கி யும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் முத்தின மன்னிக்கவும் முதிர்ந்த ரசனை என்னைப் போன்ற ஆரம்ப நிலை பதிவர்களுக்கும், விவரம் தெரியாத சிறுவர்களுக்கும் ஒரு பெரிய பாடம். ( பின் குறிப்பு : சத்தியமாக மேற்கூறிய வரிகள் இவர்களை பாராட்டி மட்டுமே எழுதப்பட்டவை.)


கவிதை துளி.

* பிணைந்திருக்கும்
இரு கொசுவத்திசுருளை
விடுவிப்பது வரையில்
சிக்கலுடனே கழிகிறது - தினப்பொழுது !
0 comments: