சொர்க்கமே என்றாலும் . . .

எனது தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர். திடீரென்று ஏற்பட்ட உடல் நிலைக் கோளாறு காரணமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை பண்ண வேண்டியிருந்ததால் சுமார் நான்கு வார காலம் எனது சொந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து அப்பாவை கவனித்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பாக்கியமே.

யாருக்கும் எப்பொழுதும் கஷ்டம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியுடன் இருப்பார். இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு நாள் காலையில் என் அம்மாவை அழைத்து " கொஞ்சம் என்னுடன் வருகிறாயா.? , சிறிது வேலை இருக்கிறது .." என்று அழைத்து சென்றவர் நேராக சென்ற இடம் நகரத்திலுள்ள ஒரு பெரிய ஆஸ்பத்திரியின் ஆபரேஷன் தியேட்டர் வாசலுக்கு, " கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு . இதோ வந்து விடுகிறேன் ." என்று ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று விட்டார். அதன்பின் தான் அம்மாவுக்கே தெரியும் ஒரு வாரமாய் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று ஆபரேஷனுக்கு தேதியும் குறித்த பின்பு அழைத்து வந்திருக்கிறார். அப்படியொன்றும் அது சாதாரணமான ஆபரேஷன் இல்லை. உடலினுள் ஏற்பட்ட ஒரு சிறிய கட்டியை நீக்கும் அளவிற்கான ஆபரேஷன். பல மாதங்களுக்கு பின்பு தான் எனக்கெல்லாம் தெரிய வந்தது. என்னத்த சொல்ல . . ?

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு லெல்லாந் தலை .


****************************************************************************************

திருநெல்வேலி - நகரத்தின் உருவம் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. பெருகிவரும் வாகன இரைச்சல், புதிது புதிதாய் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரெண்ட்கள், கடைகள் நன்றாகத்தானிருக்கின்றன. அதே நேரம் அதன் பாரம்பரியத்தை நெல்லை இழந்துவிடவில்லை.
டவுன் - நெற்றி நெறைய விபூதி, அதிகாலை பஜனை, வற்றாத தாமிரபரணி, சுத்தமான தெருக்கள், நெல்லையப்பர், காந்திமதி அம்பாளின் தரிசனம், கோவில் வாசல், அருகிலேயே மணக்கும் இருட்டுக்கடை அல்வா, வார்த்தைகளில் பாசம் தெறிக்கும் மக்கள், சுண்டி இழுக்கும் ரொட்டி, சால்னா மணம். அப்பப்பா....
அப்படியே ஜங்ஷன், பாளையங்கோட்டை பக்கம் சென்றால் ருசியான பல உணவகங்கள், பாரம்பரியமிக்க தேவாலயங்கள், பூத்து குலுங்கும் மலர்களைப் போன்ற பள்ளி குழந்தைகள் இன்னும் இன்னும் திருநெல்வேலியின் சுவை கூடிக்கொண்டேயிருக்கிறது.
புறநகர் பகுதிகளில் ஏற்படும் சாதிச்சண்டைகளும், பழிவாங்குதல்களும் அடிக்கடி இரத்த சாயம் பூசிக்கொள்ளும் தனது இன்னொரு பழைய கோர முகத்தையும் இழந்தபாடில்லை நெல்லை.

*****************************************************************************************

தோழன் சாம், மற்றும் சார்லஸ் நேற்று இரவு பாளையங்கோட்டை , முருகன்குறிச்சி அருகில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றார்கள். முட்டை மட்டும் இணைந்த சைவ உணவகம் . ஆஹா . . நம்ம ஆளுங்க கலக்குறாங்கப்பா . . வித விதமா டிஷ் ரெடி பண்றான். முட்டை சப்பாத்தி என்றொரு அயிட்டம். சப்பாத்திக்கு உள்ளே முட்டையை கொண்டுவந்து ஒரு தினுசா கொடுக்கிறான். சான்சே இல்லை.
அப்புறம் பல வெரைட்டியில தோசை, இட்லி அமிர்தமா சாம்பார், சட்னி. முட்டையின் மஞ்சள் கரு இல்லாம வொயிட் ஆம்லெட். அடடடா. . . ஒரு சின்ன குடிசைக்குள்ள நளபாகமே நடக்குது. திருநெல்வேலி பக்கம் வர்றவங்க தகவல் சொல்லிட்டு வாங்க. முட்டை சப்பாத்திக்கும், வொயிட் ஆம்லேட்டுக்கும் நான் கியாரண்டி.


******************************************************************************************

பரண்களில் இருந்து எடுத்த என் தந்தையின் பழைய டைரியிலிருந்து . . .


சிந்தனையாளர்கள்


மனிதனுக்குச் சொந்தமான சந்தோசங்களையும், துன்பங்களையும் அதை அனுபவிக்கும் மனிதர்களை விடவும், சிந்திப்பவர்களே அனுபவிக்கிறார்கள். அவற்றில் வலிந்து போய் சிக்கி ஆழ்ந்து அனுபவிக்கும் மனம் கலைஞர்கள் - சிந்தனையாளர்கள் பெற்ற வரம் அல்லது சாபம்.


பிரச்சினைகள்


இயற்கையின் விதிகளுக்கோ, விஞ்ஞானக் கணிப்புகளுக்கோ , ஒரு பெரும் புதிர் இருக்கும் எனின், அஃது எமது மனிதர் தம் அறியாமையே ஆகும்.
அறியாமைக்கு உரியவர்கள் பெரும்பாலும் ஏன் முழுமையாகவே நமது அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாகவே இருப்பதால்தான் பிரச்சினைகள் யாவும் வெடிக்கின்றன.
பிறந்த நாள் தொட்டு நான் பிறருக்கே ஒரு பிரச்சினையாக இருத்தல் குறித்து, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான அவமானம் கொள்கிறேன்.
இந்தப் பிறவியில் எனக்கு கிட்டிய பேரருள் என்னவெனில் எனக்கு நான் என்றும் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை என்பதே ஆகும்.


*******************************************************************************************



7 comments:

விக்னேஷ்வரி said...

உங்கள் அப்பாவிற்கு என் சல்யூட்.

திருநெல்வேலில ஷாப்பிங் மால் எல்லாம் வந்துடுச்சா.... அடடே...

கடைல இருக்குற ஐட்டம் எல்லாம் சொல்லி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாச்சா....

அப்பாவின் டைரிப்படியே அவர் வாழ்வும். அழகான வரிகள்.

shanmuga raman said...

மிக்க நன்றி

உன் அப்பாவின் [ என் பெயரியப்பா] வரிகளுக்கு உயிர் கொடுத்ததுக்கு ...


என்னை பாதித்த முதல ஆசரியர் இவரே !

தத்துபித்து said...

'''புறநகர் பகுதிகளில் ஏற்படும் சாதிச்சண்டைகளும், பழிவாங்குதல்களும் அடிக்கடி இரத்த சாயம் பூசிக்கொள்ளும் தனது இன்னொரு பழைய கோர முகத்தையும் இழந்தபாடில்லை நெல்லை""

ithuvum nellaiyin parampariyam.

nellai athu
manakkum mullai
makkal manasu vellai
ethirikku entrum thollai
ellorom nalla pillai
off seiyungal ungal cellai
virothiyin thalaiyil poduvanga kallai
pesuvargal inikkum sollai
iniyum eluthinaal enaku varum thollai.

ஊடகன் said...

//புறநகர் பகுதிகளில் ஏற்படும் சாதிச்சண்டைகளும், பழிவாங்குதல்களும் அடிக்கடி இரத்த சாயம் பூசிக்கொள்ளும் தனது இன்னொரு பழைய கோர முகத்தையும் இழந்தபாடில்லை நெல்லை.//

அருமை தோழா........!
தொடருங்கள் நண்பரே..........!

சூர்யா - மும்பை said...

மண்ணின் மைந்தரே ,

நானும் நெல்லை மாவட்டத்துக் காரன்தான்.ஊரில் ஒரு ரவுண்ட் அடித்து முட்டைச் சப்பாத்தி பிளஸ் வெள்ளை ஓம்லெட் சாப்பிட வைத்ததுக்கு வணக்கம் பாஸ்.

அப்பாவின் வரிகள் நன்று.

அன்புடன் சூர்யா.

எவனோ ஒருவன் said...

வணக்கம் பதிவரே,
பதிவு யதார்த்தமாக இருந்தது.
நான் வாழ்வது மதுரையில் என்றாலும் பிறந்தது நெல்லையில் .
எந்த இடுகையிலும் ஒரு மிகைப்படுதல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நெல்லையின் அழகையும் சொன்னீர்கள் அதன் கோர முகத்தையும் சொன்னீர்கள் அதற்காகவே தனியாக சபாஷ் போடணும்.

தங்களின் தந்தையின் 'சிந்தனை'அழகு

எவனோ ஒருவன் said...

//வற்றாத தாமிரபரணி //
என்று சொன்னீர்களே, நான் எங்கோ படித்ததாக ஞாபகம். பரணி ஆற்றிலிருந்து ஏதோ ஓரு குளிர்பான கம்பெனி நீர் எடுக்க
போகிறதாமே. உண்மையா ?

தாங்கள் கேள்விப்பட்டிர்களா ?