
ஈழ தேசத்திலிருந்து ,
05 - 05 - 2009 .
எங்கட தேசம்.
தமிழ்நாட்டு சகோதரனே ,
- கருப்பு கண்ணாடி, கருப்பு உடை
அணிந்து நீங்கள் கைக்காட்டி
வந்ததெல்லாம் - போதும் ...
- நீங்கள் உண்ணாவிரதம் இருந்ததும்,
கைகோர்த்து நின்றதும்,
நடைபயணம் நடந்ததும் - ஊடகங்களில்
பார்த்து சலித்துவிட்டது .
- ஆவேசப் பேட்டிகள் , அடங்காத
அறிக்கைகள் - போதும் .
- ஒரு ரொட்டி துண்டை ஒற்றுமையாய்
அனுப்ப முடிந்ததா உன்னால் ...?
- பல ஆண்டுகளை ஒலிக்கும் - எங்களின்
மரண ஓலம் இன்றுதான் உங்கள் செவிப்பறைக்குள்
நுழைந்திருக்கிறதா ...?
சகோதரா ,
- அங்கும் இங்கும் நடக்கும் அரசியல்
விளையாட்டுகளில் சிக்கி நீயும் பலியாகிவிடாதே ...
- ஆம் . நமக்கெல்லாம் தாய் - தமிழ் - தான்
ஆனால் வாயும் வயிறும் வேறுதான்
என்பதை உணர்ந்து கொள்வோம் .
- எங்களின் மரண வாழ்க்கை உங்களின்
உள்ளூர் அரசியலுக்கும் , ஒருசில கவிஞர்களின்
கவிதை வரிகளுக்கும் மட்டுமே போய் சேர்கிறது.
கவலைப்படாதே.....
இப்போதுதான் எங்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
எங்களின் வாழ்வை நாங்களே தீர்மானிக்கிறோம்
விரைவில் சேதி வரும் - அப்பொழுது
ஒரே ஓர் துளி - கண்ணீர் விடு எங்களுக்காக....
அது போதும்.
அதுவரை காத்திரு .
வழக்கம்போல்
வலியுடன் ,
ஓர் ஈழத் தமிழன் .

0 comments:
Post a Comment