நகுலன் கவிதைகள்- விகடன்

Thinnai
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60212212&format=html&edition_id=20021221

நகுலன் படைப்புலகம்


‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மெளனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

களத்துமேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலைமீது
எச்சமிட்டன
அவன் மீசையை
எறும்பு கூட்டங்கள்
அரித்தன
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம் .



ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறைய ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்த சாவிலும்
ஒரு சுகம் உண்டு .



நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை .



அலைகளைச் சொல்லி
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை .



எனக்கு
யாருமில்லை
நான்
கூட . .



அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகதெரியவில்லை
ஆனாலும் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்கார கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவி
தடவி அவன் உருக்கண்டு
உவகையுருகிறாள்
மறுபடியும் அந்த குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
- எந்த சுவரில்
எந்த சித்திரத்தை தேடுகிறாள் ?.



தன் மிதப்பு

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக்கொண்டிருந்தான்
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது அது
கூடத் தவறு , அந்த நிலையில்
அது தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில் . .



நன்றி : சாகர அலை , திண்ணை .



9 comments:

வால்பையன் said...

நகுலனின் சில கவிதைகளை படிக்க தந்தமைக்கு நன்றி!

Venkatesh Kumaravel said...

விகடனிலும் இதே தலைப்பில் சில மாதங்களுக்கு முன்னால் இதே படங்களுடன் வந்ததாக நினைவு. நல்ல தொகுப்பு. தளமே நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்! பின்தொடர்ந்து வருகிறேன்.

வசந்த் ஆதிமூலம் said...

நன்றி வெங்கி ராஜா . இருப்பதில் சிறந்ததை தர முயற்சிக்கிறேன்.

வசந்த் ஆதிமூலம் said...

நன்றி வால். உங்களது ஊக்கம் என்னை செதுக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...

அருமையான இடுகை.

Suresh said...

நல்ல பகிர்தல் தலைவா புதுசு பழசு எல்லாம் இல்லை என்ன உதவி பதிவுலக சம்பந்தமா வேணும்னாலும் கேளுங்க சரியா ...

இனி நான் உங்க பாலோவர்

நட்புடன்

சுரேஷ்

வசந்த் ஆதிமூலம் said...

அப்துல்லா அண்ணா நிரம்ப நன்றி.முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

வசந்த் ஆதிமூலம் said...

அப்துல்லா அண்ணா நிரம்ப நன்றி.முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

வசந்த் ஆதிமூலம் said...

சுரேஷ்...
கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி.உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.