தேர்தல் களம் - 2009.

பரபரப்பான பேட்டிகள் , கலவரப்படுத்தும் கருத்துகணிப்புகள் , விமர்சனங்கள் , தேர்தல் அறிக்கைகள் இந்தியா முழுமையும் தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது . தேசிய கட்சிகளின் செல்வாக்கு முற்றிலுமாக சரிந்து மாநில கட்சிகள் பெரும் செல்வாக்குடன் திகழ்கின்ற இத்தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாதவையாகவே இருக்கின்றது .

முடிவுகள் எப்படி இருப்பினும் நமக்கு (மக்களுக்கு) தேவையான மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை . தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணிக்கும் பின் அமையப்போகும் கூட்டணிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கத்தான் போகிறது .

அறுபது ஆண்டுகாலமாய் நாம் போடும் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகவே போய்கொண்டு இருக்கிறது . நாம் விரும்பும் அரசாங்கம் , நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழாதவரை நாம் போடும் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளே . இருப்பினும் இத்தவறை நாம் மீண்டும் மீண்டும் செய்துதான் ஆகவேண்டும் .

இப்பொழுது பிரச்சனையே நாம் போடப்போகும் ஓட்டுகள்தான் . இத்தனை ஆண்டுகள் நடந்த தேர்தலை பற்றிய கணிப்பில் நாம் அளிக்கும் ஓட்டின் சதவிதம் 55 - 60 வரை மட்டுமே . நாம் விரும்பும் மாற்றத்தை இந்த சதவிதம் சத்தியமாய் தரமுடியாது . மாற்றத்தை விரும்பும் பெரும்பான்மையான மக்கள் ஓட்டே போடுவதில்லை என்பதே நிஜம் .

வாக்கு சதவிதத்தை கணிசமாக அதிகரிப்பது ஒன்றுதான் மாற்றத்திற்கான முதல் வழி. அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை எந்த அரசாங்கமும் எடுக்கவில்லை என்பதும் நெஞ்சை சுடும் நிஜம் . வாக்குரிமையை கட்டாயமாக்கும் சட்டம் பற்றி பலர் பல குரலில் சொல்லியாயிற்று . நடக்காதது என்பதும் தெளிவாயிற்று .

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத நல்லவர்களையும் , வாக்களிக்கவே சோம்பல்படும் உத்தமர்களையும் விட்டு விடுவோம் . இவர்கள் தவிர நிஜத்தில் ஒரு பகுதி என்னவென்றால், நம் மக்களில் வாக்கு அளிக்க விருப்பம் இருந்தும் வாக்களிக்க இயலாதவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம் .

புரியவில்லையா...? படித்தவர்களும் , இளைஞர்களும் அதிகம் நிறைந்த நம் நாட்டில் இவர்களில் பெரும்பாலோர் வாக்களிப்பதில்லை . கிராமம் , சிற்றூர் , பேரூராட்சி , நகரம் , மாநகரம் என அனைத்து இடங்களிலும் உள்ள படித்த இளைஞர்களில் பெரும்பான்மையானோர் தனது சொந்த ஊர்களில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்திருப்பவர்கள் .

வெளியூர்களிலும் , வெளிநாட்டினிலும் வேலை பார்க்கும் இவர்களின் சதவிதம் ஏறக்குறைய 20 - 30 வரை இருக்கும் . எத்தனை பேர்களுக்கு இவர்களில் வாக்களிக்கும் வாய்ப்பு இருக்கும் ..? குடும்ப சூழல் , நெடுந்தூர இருப்பு இன்னும் பற்பல காரணங்கள் வாக்களிக்கமுடியாமைக்கு . எங்கு போய் கொட்டுவது இவர்களின் ஓட்டுகளை ..?

பொது அடையாள அட்டை, எங்கும் வாக்களிக்கும் உரிமை, அதற்கேற்ற தெளிவான செயல் திட்டங்கள், வாக்களிக்கும் அவசியம் பற்றிய சிறந்த பிரச்சாரம். நிச்சயம் மாற்றத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்டுவிடும் . இதற்கு அடுத்த கட்டமாக வாக்களிக்காத மற்றொரு பிரிவினரை வாக்கு சாவடிக்கு வரவழைக்கும் திட்டமாக இருக்கவேண்டும் .

பெண்கள் , முதியோர் இவர்கள் பெருமளவில் வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்கும் வகையில் ஒருசில வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் . வாக்களிக்கும் உரிமை , தேவையற்ற பயம் இவற்றுக்கான விளக்கங்கள் சிறந்த முறையில் பிரசாரப்படுத்தவேண்டும் .

முதன்முறையாக வாக்களிப்போரின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமானவையாக இருக்கும் . இவர்களை வாக்குசாவடிக்கு வரவழைக்கும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் .

படிப்படியாக இவற்றை சாத்தியமாக்கும் முயற்சி இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை , வலிமையான இந்தியாவை சினிமாவில் மட்டுமின்றி நேரிலும் காணலாம் .

நடக்கவே நடக்காது - என்று தெரிந்தும்
பிரயாசையுடன் ,
வாக்களிக்க வக்கற்ற ஓர் அப்பாவி இந்தியன் .


3 comments:

tamil cinema said...

நெல்லைத்தமிழ் டாட் காமில் தங்களது ஆக்கம் புக்மார்க் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பினால் சிறந்த படைப்புக்களை இத்தளத்தில் புக்மார்க் செய்து பலரும் படிக்க உதவுங்கள்.

தளமுகவரி

tamil cinema said...

நெல்லைத்தமிழ் டாட் காமில் தங்களது ஆக்கம் புக்மார்க் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பினால் சிறந்த படைப்புக்களை இத்தளத்தில் புக்மார்க் செய்து பலரும் படிக்க உதவுங்கள்.

தளமுகவரி
nellaitamil

வசந்த் ஆதிமூலம் said...

நன்றி நண்பரே,
அது என்ன மார்க் அதை எப்படி செய்வது என்பதையும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.